சாமியின் உறவினர் “வைரத்திற்கு பட்டை தீட்டுகின்றவர்” நுழைகிறார்
July 18, 2009, 8:27 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி
July 18, 2009, 8:27 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி
எஸ் பி முத்துவேலுவைப் பொறுத்த வரை மஇகா இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் “பட்டை தீட்டப்படாத வைரங்கள்”. அவர்களை மின்னச்செய்வதற்கு அவர்கள் சரியான முறையில் பட்டை தீட்டப்பட வேண்டும் என்று அவர் கருதுகிறார்.
38 வயதான முத்துவேலு பிரிட்டனில் தேர்ச்சி பெற்ற வழக்குரைஞர் ஆவார். மஇகா தலைவர் எஸ் சாமிவேலு அவருடைய பெரியப்பா ஆவார். கட்சியின் இளைஞர் பிரிவுக்கு புதிய பாதை தேவைப்படுவதாகவும் அவர் கருதுகிறார்.
இன்று தமது வழக்கறிஞர் அலுவலகத்தில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் அவர், ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி நடைபெறவிருக்கும் இளைஞர் பிரிவுக்கான தேர்தல்களில் தாம் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
தற்போது அந்தப் பதவியை டி மோகன் வகித்து வருகிறார். முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரான எஸ் ஏ விக்னேஸ்வரன் பதவி துறந்த பின்னர் அவரை இளைஞர் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக கடந்த ஆண்டு சாமிவேலு நியமித்தார்.
தனிப்பட்ட புகழுக்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ தாம் இதனைச் செய்யவில்லை என்பதை வலியுறுத்திய முத்துவேலு கட்சியிலும் சமூகத்திலும் உருப்படியான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற விருப்பத்தினால் தூண்டப்பட்டு அந்த முடிவைச் செய்ததாகக் கூறினார்.
“கட்சி மற்றும் பொதுவாக சமூகத்தின் மேம்பாட்டுக்காக இளைஞர் பிரிவுக்கு புதிய பாதை தேவை என்ற உறுதியான கருத்தைக் கொண்டிருப்பது நான் போட்டியிட விரும்புவதற்கான காரணம்”, என்று அவர் தெரிவித்தார்.
“மாற்றத்தைத் தவிர்க்க முடியாது என்ற தருணம் வந்து விட்டது என்றும் அந்த மாற்றங்கள் சமூகத்தின் தேவைகளுக்கும் அவாக்களுக்கும் ஏற்ப இருக்க வேண்டும்”, என்றும் முத்துவேலு கூறினார்.
“இளைஞர் பிரிவு முக்கியமானதாகும். ஏனெனில் வாக்காளர்களில் பெரும்பகுதியினர் இளைஞர்கள் ஆவர்.. …ஆகவே தொழில் நிபுணத்துவ குழுக்களைக் கவருவதற்கு நாம் வழி வகைகளைக் காண வேண்டும். காரணம் புதிய பாதையை வகுப்பதற்கு அவர்களுடைய அனுபவமும் அறிவும் நமக்குத் தேவை”, என்று அவர் மேலும் கூறினார்.
மஇகா இளைஞர் பிரிவுக்கான தேர்தல்களுக்கு வேட்பாளர் நியமன நாள் ஆகஸ்ட் 8 ம் தேதி ஆகும்.
“துணிச்சல்காரனுக்கு அதிர்ஷ்டம் துணை புரியும்”
தமது வாய்ப்புக்கள் பற்றி வினவப்பட்ட போது முத்துவேலு அடக்கமாகப் பதிலளித்தார். நம்பிக்கையுடன் காணப்பட்ட அவர் அதிர்ஷ்டம் தன் பக்கம் இருக்கும் என்று உறுதியாகக் கூறினார்.
“துணிச்சல்காரனுக்கு அதிர்ஷ்டம் துணை புரியும். நான் கடந்த ஒராண்டாக நாடு முழுவதும் பயணம் செய்து இளைஞர் பேராளர்களைச் சந்தித்துள்ளேன். எனது ஆற்றலுக்கு ஏற்றவாறு நான் ஆய்வு செய்துள்ளேன்….பேராளர்களின் உள்ளங்களை வெற்றி கொள்ள முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன்”, என்றார் அவர்.
கட்சியின் இளைஞர் பிரிவில் உள்ள சில உறுப்பினர்கள் குண்டர்கும்பல்களுடன் பிணைத்துப் பேசப்பட்ட போதிலும் முத்துவேலு இளைஞர் பிரிவு குறித்து வேறுவிதமான கருத்தை வெளியிட்டார்.
“மஇகா இளைஞர்கள் அர்ப்பணிப்புத் தன்மை கொண்டவர்கள், கடமையில் கவனம் செலுத்துகின்றவர்கள்”, என அவர் வலியுறுத்தினார்.
“அவர்கள் பட்டை தீட்டப்படாத வைரங்களைப் போன்றவர்கள்”
அந்தப் பதவிக்குப் போட்டியிடுவதற்கு கட்சித் தலைவரின் ஒப்பதலை அவர் பெற்றுள்ளாரா என்றும் அவரிடம் வினவப்பட்டது. அதற்கு அவர் “நான் அவரிடம் தெரிவித்தேன். அதனை அவர் ஏற்றுக் கொண்டார். … நன்று.. அவர் என்னை நிறுத்தவில்லை. அது ஒப்புதலுக்கு அர்த்தம் என நான் எடுத்துக் கொண்டேன்.”
தமது நோக்கத்தை மோகனிடமும் தெரிவித்து விட்டதாகவும் ஜனநாயக உணர்வில் போட்டியை அவர் வரவேற்றார் என்றும் முத்துவேலு குறிப்பிட்டார்.
சாமிவேலுவின் இளைய சகோதரரின் புதல்வரான முத்துவேலு 1989 ம் ஆண்டு மஇகாவில் சேர்ந்தார். 2005 ம் ஆண்டு அவர் இளைஞர் மேம்பாட்டுப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment