அன்பர்களே,
‘பிரிட்டிஷ்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி’ என்று சொல்வது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. ஆனால் அது எந்த அளவுக்குச் சரி?தமிழர்களாகிய நாம் எப்போதுமே சிறு சிறு குழுமங்களாகவும் தனித்தனி நாடுகளாகவும் சிறுசிறுநாடுகளாகவும் பிரிந்துதான்இருந்திருக்கிறோம். ஈராயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கும் முன்பாக தமிழகத்தை முடியுடை வேந்தர் மூவர் ஆண்டுவந்திருக்கிறார்கள்.அவர்கள் மட்டுமில்லை. பதினெட்டு வேளிர்கள் அவர்களின் ஊர்களை, குட்டிநாடுகளை ஆண்டனர். இன்னும் மலையமான், அதியமான், தொண்டைமான் என்று சில சிற்றரசர்கள். சங்ககாலத்துக்குப் பின்னர் தமிழகத்தில் பல்லவர்/பாண்டியர். அவர்களுக்குள்ளும் மற்றவர்களுடனும் முன்னூறு ஆண்டுகளில் அறுபத்திச்சொச்சம் போர்கள் புரிந்திருக்கின்றனர். அவர்கள் சளைத்துக் களைத்துப் போய்விட்ட பிறகு சோழர்கள் ஆண்டனர். அவர்கள் பாண்டியர்களுடனும் மற்றவர்களுடனும் முன்னூறு ஆண்டுகளில் எண்பதுக்கும் மேற்பட்ட போர்கள் புரிந்தனர்.பின்னர் சோழர்களுடனும் சேரர்களுடன் பாண்டியர்கள் சண்டை போட்டதுடன் தங்களுக்குள்ளும் போட்டுக்கொண்டனர். விஜயநகரத்தினர் தமிழகத்தை முதலில் நூறு அமரநாயக்கத் தானங்களாகப் பிரித்தனர். பின்னர் மூன்று நாயக்கர்களின் தலைமையில் மூன்று மண்டலங்கலாகப் பிரித்து, அவர்களின்கீழ் எழுபத்திரெண்டு பாளையங்களை ஏற்படுத்திவைத்தனர். இந்த மூன்று நாயக்கர்களும் தங்களுக்கும் சண்டை யிட்டுக்கொண்டனர். அவர்களெல்லாம் தெலுங்கர்களாக இருந்தாலும் அவர்களின் படைகளின் பெரும்பகுதியினர் தமிழர்கள் அல்லவா?பின்னர் அந்த எழுபத்திரண்டு பளையங்களும் தஞ்சை மராட்டிய நாடு, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கைச்சீமை ஆகிய நாடுகளும் இருந்தன. அவர்களுக்கும் மேலே ஆர்க்காட்டு நவாப். இந்த நிலையில்தான் வெள்ளைக்காரர்கள். பிரெஞ்சுக்காரர்களுக்கும் இங்கிலீஷ்காரர்களுக்கும் இடையே உலகளாவிய அளவில் நடைபெற்ற போட்டாபோட்டிகளில் நம்ம ராசாக்களும் ஓரம்சார்ந்து சேர்ந்து சண்டையிட்டனர். நவாபாக இருக்கட்டும், மொகலாயராக இருக்கட்டும்; பிரிட்டிஷ்/பிரெஞ்சாக இருக்கட்டும். நம்மிடையே இருந்த பிளவு/பூசல்களைப் பயன்படுத்திக்கொண்டனர். 1801-இல் எல்லாமே ஓய்ந்தது. கும்பினிக் குடையின் கீழ் எல்லாத் தமிழர்களும் மெட்ராஸ்ப்ரெஸிடென்ஸி, புதுக்கோட்டை ஸ்டேட் ஆகியவற்றில் வாழ்ந்தார்கள். நிம்மதியாக, சட்டங்களுக்கும் பிரிட்டிஷ் நீதிக்கும் பாதுகாப்புக்கும் உட்பட்டு. மூவாயிரம் ஆண்டுகளாகத் தங்களுக்குள் பிரிந்திருந்த தமிழ்க்குடியினர் முதன்முறையாக ஒன்றாக ஒற்றுமையாக(?)வாழ்ந்தனர். பிரிட்டிஷாரின்கீழ்.
அன்புடன் ஜெயபாரதி
No comments:
Post a Comment